கிராம சுயாட்சி இயக்கத்தின் திட்டங்கள் செயல்படுத்த துறை வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்

கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்த துறை வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.

Update: 2018-04-22 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற மே 5-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுயாட்சி இயக்கம்-2018 திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற மே 5-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு உள்ள 17 வட்டாரங்களை சேர்ந்த 61 கிராம ஊராட்சிகள் உள்பட 860 ஊராட்சிகளில் பிரதான் மந்திரி உஜ்ஜவாலா யோஜனா, சவுபாக்கியா (பிரதான் மந்திரி சஹாஜா ஹர்கர் யோஜனா), உஜ்ஜவாலா திவாஸ், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா, மிஷன் இந்திரதனுஷ் ஆகிய மத்திய அரசு திட்டங்களின் கீழ் 100 சதவீத இலக்கினை அடைந்திடும் வகையில் கிராம சுயாட்சி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 61 கிராம ஊராட்சிகளில் கிராம சுயாட்சி இயக்கம் 2018 -ன் ராஷ்டிரிய (தேசிய) பஞ்சாயத்து ராஜ் தினம் நாளையும் (24-ந் தேதி), கிராம சுவராஜ் தினம் 28-ந் தேதியும், ஆயுஷ்மான் பாரத் தினம் 30-ந் தேதியும், கிஷான் கல்யாண் தினம் (உழவர் நல நாள்) மே 2-ந் தேதி, ஆஜீவிக்கா தினம் மே 5-ந் தேதியும் மத்திய அரசு திட்டங்களின் சார்பாக சிறப்பு தினங்களாக கொண்டாடப்படுகிறது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சுயாட்சி இயக்கம் சிறப்பான முறையில் செயலாக்கம் செய்திடும் வகையில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் நிலையில் துறை வாரியான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வட்டார வாரியான கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்