செய்யாறு அருகே திருடன் என நினைத்து மாணவன் அடித்துக் கொலை

செய்யாறு அருகே திருடன் என நினைத்து மாணவனை அடித்துக் கொலை செய்தனர்.;

Update: 2018-04-22 23:15 GMT
செய்யாறு,

செய்யாறு அருகே திருடன் என நினைத்து கல்லூரி மாணவனை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர். இதையடுத்து மாணவ னின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்யாறு தாலுகா சுமங்கலி கிராமத்தில் அடிக்கடி சந்தேகப்படும்படியாக, அறிமுகம் இல்லாத நபர்கள் நள்ளிரவில் சுற்றி திரிவதாகவும், திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சுமங்கலி கிராமத்தின் வழியாக சென்றார். அவரை பார்த்த கிராம மக்கள் சந்தேகப்பட்டு மடக்கியுள்ளனர். கூட்டமாக இருப்பதை பார்த்த இளைஞர் பயந்து போய் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் திருடன் என நினைத்து, கிராம மக்கள் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்து தாக்கினர். மேலும் கல்லால் அடித்தனர். இதில் தலையில் படுகாய மடைந்த அவரை பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது இறந்தவர் செய்யாறு தாலுகா தென் தண்டலம் கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் சதாசிவம் என்பதும், தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீ சார் சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சதா சிவத்தின் உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு வந்தனர். அங்கு அவரது உடல் இல்லாததால் மருத்துவமனை எதிரில் செய்யாறு - ஆற்காடு சாலை யில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து மோரணம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, சுமங்கலி கிராமத்தை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பகலவன் செய் யாறு போலீஸ் நிலை யத்தில் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது விடுதலை சிறுத் தைகள் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, இறந்த சதா சிவத்தின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சதாசிவத்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்