புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 626 வழக்குகளுக்கு தீர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 626 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

Update: 2018-04-22 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.

இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி லியாகத்அலி, புதுக்கோட்டை சார்பு நீதிபதி இந்திராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி கிங்ஸிலி கிறிஸ்டோபர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 894 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 2 ஆயிரத்து 970 வழக்குகளில், 70 வழக்குகளுக்கு ரூ.30 லட்சத்து 5 ஆயிரத்து 209-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 924 வழக்குகளில் 556 வழக்குகளுக்கு ரூ.4 கோடியே 98 லட்சத்து 41 ஆயிரத்து 41-க்கு தீர்வு காணப்பட்டது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 626 வழக்குகளில் ரூ.5 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 250-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக நிர்வாக உதவியாளர் தங்கராஜ்மாரியப்பன் குழுவினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்