மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் சாவு

மாரண்டஅள்ளியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2018-04-22 22:15 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஏழுகுண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 48), விவசாயி. இவர் நேற்று மாரண்டஅள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சிக்கமாரண்டஅள்ளியை சேர்ந்தவர் அர்ச்சுனன்(23), எலக்ட்ரீசியன். இவர் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

மாரண்டஅள்ளி பழைய பஸ் நிலையம் அருகில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அண்ணாமலை, அர்ச்சுனன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

2 பேர் சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அண்ணாமலை, அர்ச்சுனன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதையறிந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது ஆஸ்பத்திரி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த அண்ணாமலைக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அர்ச்சுனனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்