சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தொடர் விசாரணையில் உயர் அதிகாரிகளின் விவரங்களை கூறாமல் நிர்மலாதேவி இழுத்தடிப்பு

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தொடர் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் இழுத்தடிப்பதால் போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

Update: 2018-04-22 23:30 GMT
விருதுநகர்,

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை செல்போனில் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துசங்கரலிங்கம், கருப்பையா, சாஜிதா பேகம் ஆகியோர் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்து வரும் இந்த விசாரணையில் பேராசிரியை நிர்மலாதேவி பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரின் பெயரைக் கூறி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டதாக மட்டும் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 நாட்கள் விசாரணையின் போது தொடர்புடைய உயர் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்களை பெற்று விடலாம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனாலும் பேராசிரியை நிர்மலாதேவி உயர் அதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசியதாக தொடர்ந்து தெரிவிக்கின்றாரே தவிர உயர் அதிகாரிகளின் பெயர் விவரங்களை தெரிவிக்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது பற்றி விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி கூறியதாவது:-

எனது 30 ஆண்டு கால போலீஸ் பணியில் எத்தனையோ குற்றவியல் சம்பவங்களில் தொடர்புடைய பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளேன். ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி போன்று தெரிந்த விவரங்களை கூறாமல் அடம் பிடிக்கும் பெண்ணை பார்த்ததில்லை. தொடர்புடைய உயர் அதிகாரிகளின் பெயர் விவரங்கள் கிடைக்காததாலும், தலைமறைவாகி உள்ள இரு பேராசிரியர்கள் இன்னும் சிக்காததாலும், அடுத்த கட்ட நேரடி நடவடிக்கை தாமதப்படுகின்றது. எனினும் அடுத்தடுத்த விசாரணை நாட்களில் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேராசிரியை நிர்மலாதேவியின் கணவர் சரவண பாண்டியனிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இதனையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று கரூரைச் சேர்ந்த 2 காண்டிராக்டர்களிடமும், திருச்சியைச் சேர்ந்த ஒரு பேராசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இது தவிர திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் அடிக்கடி பயன்படுத்தும் வாடகை கார்களின் டிரைவர்களிடமும் விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி மைய பொறுப்பாளர் கலைச்செல்வனும் நேற்று மீண்டும் விசாரணைக்காக விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியன் அருப்புக்கோட்டை நகரசபையில் ஒப்பந்ததாரராக இருப்பதால் நிர்மலா தேவி முன்பு அடிக்கடி நகரசபை அலுவலகத்துக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து அங்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் செல்வராஜ் என்ற ஊழியரை விருதுநகருக்கு அழைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சில ஒப்பந்ததார்களையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர். 

மேலும் செய்திகள்