மின்வாரிய ஊழியர் வீட்டில் 16 பவுன் கொள்ளை: மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

மின்வாரிய ஊழியர் வீட்டில் 16 பவுன் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-04-22 21:45 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் காதர் ஷெரீப் (வயது 55). இவர் தென்செங்கம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷாகீரா பேகம் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாகீரா பேகத்தின் தாயார் ரமீஷாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 18-ந் தேதி தனது மாமியாரை காண காதர் ஷெரீ்ப் தனது குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் ஷாகீரா பேகத்தின் சகோதரி ஜெமீனா அவரது வீட்டை சுத்தப்படுத்த சென்றார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த காதர் ஷெரீப் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- மின்வாரிய ஊழியர் தனது குடும்பத்தினருடன் ஆஸ்பத்திரிக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டில் வைத்திருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை சேகரித்து உள்ளோம். மோப்ப நாய் கனி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மின்வாரிய ஊழியரின் வீட்டில் 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்