காரைக்குடி மரக்கடையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

காரைக்குடியில் உள்ள மரக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாயின.;

Update: 2018-04-22 21:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி மீனாட்சிபுரம் பட்டவர் கோவில் அருகில் இப்ராகிம் மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இந்த மரக் கடையில் மர பீரோ, கட்டில் உள்ளிட்ட மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்தும், அவற்றை விற்பனைசெய்தும் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு அதனை உரிமையாளர்கள் சென்றுவிட்டனர். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென்று அந்த மரக்கடையில் இருந்து புகை கிளம்பியது.

இதனால் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என்னவென்று பார்த்தபோது மரக்கடையில் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென எரிந்து கடையில் இருந்த மர பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் மீது பற்றியது. இதில் அந்த பொருட்களும் எரிந்தன.

மேலும் மரக்கடையில் எரிந்த தீ அருகில் இருந்த அப்துல் என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபகுதி, ஷேக் முகமது என்பவருடைய பெட்டிக்கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பற்றி எரிந்தது. இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து உடனடியாக காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அதிகாரி ஆறுமுகம், காரைக் குடி தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம், தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தினால் மரக்கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்திற்கான காரணம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்