ஆனைமலை-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்லடத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்

ஆனைமலை-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல்லடத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-04-22 23:15 GMT
பல்லடம்,

ஆனைமலை-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய முடியும். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு கிடப்பில் போட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி அனைத்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் ஆனைமலை-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆனைமலை-நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியினர் மற்றும் விவசாயிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தலைமை தாங்கினார். பல்லடம் பகுதி தலைவர் வேல்முருகன் வரவேற்றார். இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் என்.கே.டி. பொன்னுசாமி, பொருளாளர் டாக்டர் தங்கராஜ், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஏர்முனை இளைஞரணி மாவட்ட தலைவர் ஜோதி பிரகாஷ், செயலாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சுசீந்திரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:-

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்று உள்ளது. இந்த நிலங்களுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு 8 மாதங்கள் வரை தண்ணீர் கிடைத்தது. இதனால் வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, பருத்தி, பெரிய வெங்காயம் சாகுபடி செய்து வந்தனர். இதனால் 2 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர். ஆனால் தற்போது ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் போதிய அளவு கிடைக்காததால் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்தை காப்பாற்ற ஆனைமலை-நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்