செவ்வாப்பேட்டை அருகே ரெயில் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்தது, ரெயில் சேவை பாதிப்பு

செவ்வாப்பேட்டை அருகே ரெயில் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2018-04-22 22:30 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. மின்சார ரெயில் சென்ற சிறிது நேரத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் அந்த மின்சார ரெயில் நடுவழியில் நின்றது. இது குறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அனைத்து மின்சார ரெயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன. திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி ரெயில் நிலை யங்களில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற விரைவு ரெயில் செவ்வாப்பேட்டை அருகே நடுவழியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மின்சார ரெயிலில் வந்த பெரும்பாலான பயணிகள் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டனர். அதன் பின்னர் திருவள்ளூர் நோக்கி சென்ற ரெயில்கள் பட்டாபிராமில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டது. இதனால் நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பட்டை ரெயில்நிலையங்களில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படவில்லை. ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளனானார்கள். 3 மணி நேரத்துக்கு பின்னர் அறுந்து விழுந்த மின்கம்பி சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற மின்சார ரெயில் பாதையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்