ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி

ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-04-22 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள திருக்காவலூர் எனும் ஏலாக் குறிச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து புள்ளம்பாடி வட்டார முதன்மை குரு ஹென்றி புஸ்பராஜ் தலைமையில், பங்கு தந்தை சுவக்கின், உதவி பங்கு தந்தை திமோத்தி ஆகியோர் முன்னிலையில் திருவழிபாடு நடைபெற்றது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும், மாலை 6 மணிக்கு திரு வழிபாடுகளும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது. 18-ந் தேதி மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், தொடர்ந்து தேர்பவனியும் நடைபெற்றது.

தேர்பவனி

விழாவில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில், திருவிழா திருவழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது. தேரில் அடைக்கல அன்னை புடவை கட்டிய தமிழ் பெண்ணாக எழுந்தருளினார். பின்னர் பங்கு தந்தையர்கள் பாபநாசம் பிரான்சிஸ், கபிஸ்தலம் யூஜின்டோனி ஆகியோர் தேரை புனிதப் படுத்தினர். இதையடுத்து கிறிஸ்தவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. விழாவில் நேற்று இரவு மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில், திருவிழா திருவழிபாடும், தொடர்ந்து இரவு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

இன்று கொடியிறக்கம்

விழாவில் இன்று (திங்கட் கிழமை) காலை 6 மணிக்கு கொடியிறக்கமும், மணத்திடல் பங்கு தந்தை செல்வராஜ் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை சுவக்கின், உதவி பங்கு தந்தை திமோத்தி, சகோதரர் லூக்காஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்