1030 கார்களை வடிவமைத்த அதிசய மனிதர்
விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் செயல் படாத நிலைக்கு சென்ற முஸ்தபாவை பார்த்து, ‘இனி உங்களால் நடக்க முடியாது.
விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் செயல் படாத நிலைக்கு சென்ற முஸ்தபாவை பார்த்து, ‘இனி உங்களால் நடக்க முடியாது. உங்கள் வாழ்க்கையே முடங்கிப் போய்விடும்’ என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். அவரோ இன்று டாக்டர்களே மலைக்கும் அளவிற்கு விதியை மாற்றி எழுதி சாதனை படைத்திருக்கிறார்.
நடமாடவே முடியாது என்று கூறப்பட்டவர் தனக்காக தானே ஒரு காரை வடிவமைத்து அதில் ஏழரை லட்சம் கிலோ மீட்டர்தூரம் தனியாகவே ஓட்டிச் சென்றிருக்கிறார். தன்னை போல் இடுப்புக்கு கீழ் செயல்படாத 1030 பேருக்கு இவரே வாகனங்கள் டிசைன் செய்தும் கொடுத்து அவர்களையும் வெளி உலக தொடர்புக்கு கொண்டு வந்துவிட்டார். 17 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார். இப்படி தளர்ந்து போன உடலுக்கு சவால் விட்டு ஜெயிக்கும் முஸ்தபா கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்.
இவருடைய முழு பெயர் தொரப்பா முஸ்தபா. 24 வருடங்களுக்கு முன்பு வரை சராசரி மனிதர்களை போலவே உற்சாகமாக வலம் வந்திருக்கிறார். எதிர்பாராத விபத்து இவருடைய விதியை மாற்றி அமைத்துவிட்டது. விபத்தின் கோரத்தில் உடல் இயக்கம் இடுப்புக்கு கீழ் செயல்படாமல் நின்று போனது. தன்னுடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் மனைவி ஷபியா என்கிறார். விபத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு மனைவி கொடுத்த ஊக்கம் காரணமாக இருந்திருக்கிறது.
‘‘நான் விபத்தில் சிக்கியது முதல் இன்று வரை என் மனைவி அழுததை நான் பார்க்கவே இல்லை. என்னை பரிதாபமாக பார்த்து அவர் அழுது கொண்டே இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது. படுக்கையிலேயே கிடக்கும் வெற்று உடலாகத்தான் நான் மாறியிருந்திருப்பேன்’’ என்று மனைவியை அணைத்தபடி சொல்கிறார்.
முஸ்தபாவின் அப்பா விவசாயி. தாயார் குடும்ப தலைவி. 10-ம் வகுப்புடன் முஸ்தபா படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கார் ஓட்டுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். அதனால் சவுதி அரேபியாவுக்கு டிரைவர் வேலைக்கு சென்றிருக்கிறார். 1987-ம் ஆண்டு இவருடைய திருமணம் நடந்திருக்கிறது. அதன்பிறகு சவுதி அரேபியாவுக்கு செல்லாமல் வசிக்கும் பகுதியிலேயே கார் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கூடவே ஒரு பேக்கரியும் நடத்தி இருக்கிறார். வாழ்க்கை சுமுகமாக நகர்ந்திருக்கிறது. முர்ஷித் என்ற மகனும் பிறந்திருக்கிறான். திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு நாள் பேக்கரியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றிருக்கிறார். ஒரு பாலத்தை கடந்தபோது ஆட்டோ நிலை தடுமாறியிருக்கிறது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் முஸ்தபா தூக்கி வீசப்பட்டிருக்கிறார். முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டு வலியால் அலறி துடித்திருக்கிறார்.
பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றும் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் முஸ்தபாவை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவரை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள், இடுப்புக்கு கீழ் உடல் இயக்கம் இல்லாதவர்கள் வாழ்வில் சாதித்த கதைகளையெல்லாம் எடுத்து கூறி தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள். கால போக்கில் அவரை பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து போனது. உடல் நிலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொழுதை போக்கு வதற்கு சமூக வலைத்தளங்களையோ, டி.வி.யையோ பார்க்கும் வசதியும் இல்லாத நிலை இருந்திருக்கிறது. அதனால் முஸ்தபா வாழ்வில் தனிமை தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது.
கணவரை தனிமை வாட்டாமல் இருக்க என்ன செய்வது என்ற கவலை ஷபியாவையும் வதைத்திருக்கிறது. படுத்த படுக்கையாக கிடந்தவரை வீல் சேருக்கு மாற்றி யிருக்கிறார். வீல் சேருக்கு மாறிய பிறகு முஸ்தபாவுக்கு வெளியுலக தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இரு பக்கமும் டயர்களை பொருத்தி அதை ஓட்ட முயற்சி எடுத்து, பயணம் செய்ய தொடங்கி இருக்கிறார். ஸ்கூட்டரில் ஏறவும், இறங்கவும் மட்டுமே மற்றவர்களின் உதவி தேவைப்பட்டிருக்கிறது.
இருசக்கர வாகனம் ஏற்படுத்திக் கொடுத்த வெளியுலக தொடர்பை வலுப்படுத்தி பேக்கரி தொழிலை விரிவாக்கம் செய்திருக்கிறார். மேலும் 2 பேக்கரிகளையும் தொடங்கி இருக் கிறார். வாழ்க்கை மீண்டும் பழைய திசையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது என்ற சந்தோஷம் எட்டிப்பார்ப்பதற்குள் மீண்டும் விபத்து ரூபத்தில் விதி விளையாடி இருக்கிறது. இடுப்புக்கு கீழ் கால்கள் உணர்வற்று இருப்பதை உணராமல் ஸ்கூட்டரில் பயணித்திருக்கிறார். கால்கள் சாலையில் வெகு தூரம் உராய்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்கூட்டரில் செல்ல பயப்பட்டிருக்கிறார். குடும்பத்தினரும் ‘இனி ஸ்கூட்டரில் செல்ல வேண்டாம்’ என்று கூறி இருக்கிறார்கள்.
இதையடுத்து கைகளால் காரை இயக்குவது பற்றி சிந்தித்திருக்கிறார். அதுபற்றி விசாரிக்க தொடங்கியபோது இடுப்பு கீழ் செயல் இழந்தவர்கள் ஓட்டும் கார் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. அப்படி ஒரு காரை தானே வடிவமைத்து ஓட்ட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு களம் இறங்கி இருக்கிறார். அதற்கு காரணம் சவுதி அரேபியாவில் அப்படிப்பட்ட வாகனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்து இருக்கிறார்.
முஸ்தபாவின் கார் ஓட்டும் கனவு பல தடைகளை கடந்து நிறைவேறி இருக்கிறது. அதுபற்றி நினைவு கூர்கிறார்:
‘‘நான் கார் ஓட்டுவதற்கு ஆர்வமாக இருப்பதை புரிந்து கொண்ட உறவினர் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். நான் ஓட்டுவதற்கு ஏற்ப காரை வடிவமைக்க மெக்கானிக் ஒருவர் உதவியாக இருந்தார். எப்படியெல்லாம் டிசைன் செய்ய வேண்டும் என்பதை நான் விவரித்து கூறியது அவருக்கே புது விஷயமாக தெரிந்தது. கால் களுக்கு பதிலாக ஒரு கையால் இயக்கும் வகையில் பிரேக், ஆக்சிலேட்டர், கிளெச் ஆகிய மூன்றையும் மாற்றினோம். மற்றொரு கையில் ஸ்டீரியங்கை இயக்க திட்டமிட்டோம். ஆரம்பத்தில் எதுவும் கைகூடிவரவில்லை. கடுமையான முயற்சிகளுக்கு பிறகு எல்லாமே என் கைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காரை நானே இயக்கி சாலையில் பயணித்தேன். அப்போது அடைந்த சந்தோஷம் அளவில்லாதது.
‘இனி உன்னால் நடக்கவே முடியாது’ என்று சொன்ன டாக்டர்கள் முன்னால் நானே காரை ஓட்டிச்சென்று போய் நின்றேன். என்னை பார்த்ததும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதை பார்த்து ஒடிசாவை சேர்ந்த 2 பேர் காரில் என்னை தேடி வந்தார்கள். அவர்கள் போலிேயாவால் பாதிப்புக்குள்ளானவர்கள். நான் எப்படி காரை ஓட்டுகிறேன் என்பதை ஆர்வமாக கேட்டார்கள். அவர்களும் என்னை போலவே காரை ஓட்டுவதற்கு ஏற்ப காரை உருவாக்கி கொடுத்தேன்.
2001-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த தேசிய அளவிலான தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க வருமாறு என்னை அழைத்தார்கள். அந்த கண்காட்சியில் தென்னிந்தியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே நபர் நான் மட்டும்தான். நண்பர்களுடன் சேர்ந்து நானே காரை ஓட்டி சென்று கண்காட்சியில் பங்கேற்றேன். எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை. அங்கு காரை எப்படி டிசைன் செய்து ஓட்டுகிறேன் என்பதை விளக்கி கூறினேன். பல தரப்பினரும் என்னை மனதார பாராட்டினார்கள். என்னை போன்றவர்களுக்காக இதுவரை 1030 கார்களை வடிவமைத்து இருக்கிறேன். மாருதியில் ஆரம்பித்து வால்வோ கார் வரை பலவிதமான கார்களையும் உருமாற்றியிருக் கிறேன். அதற்கு விஜயன் என்ற மெக்கானிக் முதுகெலும்பாக செயல் படுகிறார். நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அதை அவர் அப் படியே செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துவிடுவார். இந்த மாதிரி காரை டிசைன் செய்வதற்கு குறைந்த அளவு பணமே செலவாகும். விபத்தில் சிக்கி ஒரு கை செயல்பாட்டில் இருந்தாலும் அதை கொண்டே அவர்களால் காரை ஓட்ட முடியும். விபத்தில் சிக்கி காரை ஓட்ட முடியாத நிலையில் இருப்பவர்களின் உடல் தன்மை எப்படி இருக்கிறது? அவர்கள் என்ன மாதிரியான காரை ஓட்ட விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அதற்கேற்ப காரை வடிவமைக்கிறேன். இதுவரை நான் 7 கார்களை மாற்றி இருக்கிறேன். ஏழை குடும்பத்தை சேர்ந்த 18 பேருக்கு இலவசமாகவே காரை டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன்’’ என் கிறார்.
முஸ்தபா தன் உடல் நலத்தை மேம்படுத்த ஆயுர்வேத சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கான மருந்துகள் தயாரிக்க சில வகை மூலிகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவில் 2014-ம் ஆண்டு மூலிகை தோட்டம் உருவாக்கி இருக்கிறார். அவருக்கு விபத்துக்கான காப்பீடு தொகையும் கிடைத்து இருக்கிறது. அதை கொண்டு நிலம் வாங்கி விவசாயமும் செய்ய தொடங்கி இருக் கிறார். 14 ஏக்கர் நிலத்தில் விவசாயமும், 3 ஏக்கர் நிலத்தில் மூலிகை தோட்டமும் உருவாக்கி இருக்கிறார். இவருடைய மகன் முர்ஷித்துக்கு திருமணமாகிவிட்டது.
நடக்கமுடியாத நிலையில் இருந்து மீண்டு வந்து தன்னை போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் முஸ்தபா அடுத்த கட்டத்தை நோக்கி தனது பயணத்தை தொடந்து கொண்டிருக் கிறார்.