‘நான் மோடி எதிர்ப்பாளர் அல்ல, மனதில் தோன்றுவதை பேசுவேன்’ உத்தவ் தாக்கரே சொல்கிறார்

நான் மோடி எதிர்ப்பாளர் அல்ல, ஆனால் மனதில் தோன்றுவதை தொடர்ந்து பேசுவேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

Update: 2018-04-21 23:41 GMT
மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ச்சியாக பா.ஜனதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் ஆசிரியரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் எழுதிய ‘கோப்’ எனும் மராத்தி மொழி புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்று பேசியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக இந்துத்வா சிந்தனை உடையவர்கள் அனைவருடனும் நட்பு பாராட்டி வருகிறோம். ஆனால் இன்று பா.ஜனதா கூறிய ‘அச்சே தின்’(நல்ல நாட்கள்) மலர்ந்ததும் சிவசேனா தேவையற்றவர்களாக மாறிவிட்டோம். இதுதான் எங்களுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது.

நான் மோடி எதிர்ப்பாளர் அல்ல, ஆனால் என் மனதில் தோன்றுவதை தொடர்ந்து பேசுவேன். எனது தந்தை பால்தாக்கரே மனதில் பட்டதை பேசுவதற்கு கற்றுகொடுத்துள்ளார். ‘சாம்னா’ பத்திரிகையை லாப நோக்கத்தில் எப்போதும் நடத்தியது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மகாபாரத காலகட்டத்தில் இணையதள சேவை இருந்ததாக திரிபுரா மாநில முதல்-மந்திரி பிப்லாப் தேப் கூறியதை சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே, திரிபுராவில் ஆட்சியில் அமர பா.ஜனதாவினர் ரத்தம் சிந்தி உழைத்துள்ளீர்கள். ஆனால் இது போன்ற சிரிப்பு மூட்டக்கூடிய கருத்துகளை கேட்கும்போது ஒருவர் என்னதான் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். 

மேலும் செய்திகள்