காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்செந்தூரில் நாளை மனிதச்சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்செந்தூரில் மனிதச்சங்கிலி போராட்டம் நாளை நடக்கிறது.

Update: 2018-04-21 23:24 GMT
தூத்துக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்செந்தூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை தெற்கு மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொள்ளும் மனிதச்சங்கிலி போராட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை திருச்செந்தூர் நகரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் தி.மு.க. செயல்வீரர் கள், அனைத்து கட்சி செயல்வீரர்கள், பொறுப்பாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பகுதி செயலாளர் கருணாகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்