ரெயில் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ - எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் கோரிக்கை

ரெயில் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வேண்டும் என்று எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-04-21 22:39 GMT
கோவை,

தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.யு. அலுவலகத்தில் நடந்தது. உழைப்பாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.கே.தேவராஜ் வரவேற்றார். செயல் தலைவர் கணபதி சிவக்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளரும், எஸ்.ஆர்.எம்.யு. சேலம் கோட்ட செயலாளருமான எம்.கோவிந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ரெயில்வே பார்சல், கேட்டரிங், ஆட்டோ, அமைப்பு சாரா மற்றும் கட்டுமான சங்க நிர்வாகிகள் சுந்தரவடிவேலு, அல்தாப், லாலி ரோடு செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

உழைப்பாளர் தினமான மே தின விழாவை கோவை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி பெயர் பலகை அமைத்து சிறப்பாக கொண்டாடுவது. தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம்(மே) கோவை நகரில் நடத்துவது என்றும் மாநாட்டிற்கு தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கு தியாகி என்.ஜி.ராமசாமியின் பெயரை சூட்ட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது. தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் பணிபுரியும் பார்சல், கேட்டரிங், ஆட்டோ மற்றும் துப்புரவு பிரிவில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதுடன் ரெயில்வே நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட மில்களில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து மூடிய ஆலைத்தொழிலாளர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்ச பென்சன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்