கடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்

கடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-04-21 22:45 GMT
கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 724 ஏழை பெண்களுக்கு 64 கிலோ தங்கமும், ரூ.134 கோடி மதிப்பில் நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நல்ல வாய்ப்பை பெண்கள் பயன் படுத்தி கொண்டு பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தில் மட்டும் தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம் வளர்ச்சியான மாநிலம் என பேசப்பட்டது. அங்கு நான் (தம்பிதுரை) சென்று பார்த்த போது அங்கு இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களுக்கான திட்டங்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தியவர். காவிரி விவகாரத்திலும் இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் 230 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கரூர் உதவி கலெக்டர் பாலசுப்பிரமணியம் (பொறுப்பு) கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் காளியப்பன், சிவசாமி, கமலக்கண்ணன், நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரூர் நகராட்சி 38, 47 ஆகிய வார்டுகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், “ரூ.4 கோடியே 75 லட்சத்தில் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்தினை விரிவுபடுத்த தள ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.13 கோடியே 10 லட்சத்தில் வடிகால் வசதிக்கான பணிகள் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி துறையில் ரூ.10 கோடி கரூருக்கு ஒதுக்கப்பட உள்ளது. அனுமதியற்ற மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ள மே மாதம் 3-ந் தேதி கடைசி ஆகும். அனுமதியற்ற மனை பிரிவினர் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்றார். 

மேலும் செய்திகள்