198 பெண்களுக்கு 1½ கிலோ தங்கம்- ரூ.62 லட்சம் திருமண நிதி உதவி விஜயகுமார் எம்.பி. வழங்கினார்

குமரி மாவட்டத்தில் 198 பெண்களுக்கு 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.62 லட்சம் திருமண நிதி உதவியை விஜயகுமார் எம்.பி. வழங்கினார்.

Update: 2018-04-21 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் குமரி மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் நடந்த நிகழ்ச்சியில் 198 பயனாளிகளுக்கு 1 கிலோ 584 கிராம் எடையுள்ள தங்க நாணயங்கள் மற்றும் ரூ.62.75 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவித்தொகை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவித் தொகை ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

உயர்வு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, தமிழ்நாட்டில் பெண்கள் சமுதாயம் முன்னேற்றமடைய பெரும் பங்கு வகித்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக சமூக நலத்துறை மூலம் படித்த ஏழை பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக 4 கிராம் தங்கமும், பட்டதாரி அல்லாத மணப்பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும், பட்டயக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்த மணப்பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும் வழங்கபடுவதாக அறிவித்தார். அதன்படி, 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை 27,750 ஏழை பெண்களுக்கு 86 கிலோ 416 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.100 கோடியே 57 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும் அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் ஏழை பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக வழங்கப்படும் 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக முதல் கட்டமாக 8,452 ஏழை பெண்களுக்கு 38 கிலோ 808 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.36 கோடியே 8 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டது.

பயன்பெற வேண்டும்

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள 198 ஏழை பெண்களுக்கு 1 கிலோ 584 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.62 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு பெண்களின் வாழ் வாதாரம் உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து தகுதியான பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் உதவிகள், முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களை தெரிந்துகொள்வதோடு உங்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அதிகாரி செல்வி பியூலா, மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜன், நகர செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்