பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், என்று திருச்செங்கோட்டில் ஜி.கே.வாசன் கூறினார்.;

Update: 2018-04-21 23:00 GMT
எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ராயர்பாளையம் பகுதியில் த.மா.கா. நிர்வாகியின் தந்தை இறந்தது குறித்து விசாரிப்பதற்காக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருச்செங்கோடு வந்தார். அங்குள்ள ஒரு ஓட்டலில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பத்திரிகை துறை மட்டுமல்ல எந்த துறை சார்ந்த பெண்களையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி உள்ளார். பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன், பொது தளத்தில் வெளியிடுகிற கருத்துக்களை முழுமையாக படித்த பின்பு தான் வெளியிட வேண்டும்.

தமிழக அரசு கலால் வரியை குறைக்க வேண்டும். மக்கள் மீது சுமையை கூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அரசியல் தலையீடு உள்ளதா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் கவர்னர் விசாரணை கமிஷன் அமைத்திருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு பயன்படாத, பாதகமான திட்டங்களை தமிழக மக்கள் மேல் திணிக்கிறது. மக்கள் எண்ணங்களை மத்திய அரசிடம் கொண்டு சேர்க்காத அரசாக தமிழக அரசு உள்ளது. த.மா.கா. தனித்தன்மையோடு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை மாநில அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின்போது நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்