சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் சமரசத்தால் கைவிடப்பட்டது

சோழவந்தான் அருகே குருவித்துறையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகளின் சமரசத்தால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Update: 2018-04-21 22:00 GMT
சோழவந்தான்,

சோழவந்தானை அடுத்துள்ளது குருவித்துறை. இந்த ஊரின் ரோடும், இங்கிருந்து வாடிப்பட்டி, நாச்சிகுளம், மேலக்கால் பகுதிகளுக்கு செல்லும் ரோடுகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது. பயனற்று கிடக்கும் இந்த சாலைகளால் பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். இந்த சாலைகள் வழியாக வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர்.

 மேலும் சாலை மோசமாக உள்ளதாக கூறி பஸ்வரத்தும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமலும், வாகனங்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாமலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைதுறைக்கு பலமுறை புகார் செய்தும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கொடுத்தும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் தினமும் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மெயின் ரோட்டில் ஒன்று திரண்டனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காடுபட்டி போலீசார் ஆகியோர் மறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சாலைகள் இன்னும் ஓரிருநாளில் சீரமைக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்