உஜ்வாலா திட்டத்தில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2018-04-21 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டியில் பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு, இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்புக்கான ஆணை மற்றும் கியாஸ் அடுப்பு, எல்.இ.டி. பல்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு மற்றும் எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது உஜ்வாலா திவாஸ் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 100 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக வைப்பு தொகையான ரூ.1,600 செலுத்த தேவையில்லை. மேலும் ரூ.1,600 மதிப்புள்ள கியாஸ் அடுப்பு, சிலிண்டர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகியவை பெற கடன்வசதி அளிக்கப்படுகிறது. எனவே, வருகிற 5-ந்தேதி வரை இலவச கியாஸ் இணைப்பு பெறுவதற்கு சம்பந்தப்பட்ட முகவர்களிடம், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வீடுகளில் சாதாரண மின்விளக்குகளை பயன்படுத்துவதால், அதிக மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, அரசு மானிய விலையில் மின்சார வாரியம் வழங்கும் எல்.இ.டி. பல்புகளை வாங்கி, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சென்னை துணை பொதுமேலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் பழனி அருகே உள்ள மானூரில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணக்குமார், தனிதாசில்தார் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பழனி தாலுகாவில் புகையில்லா கிராமங்களாக தேர்வு செய்யப்பட்ட மானூர், கோரிக்கடவு, பச்சளநாயக்கன்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கிற தலா 100 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டன.

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் நடந்த இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு ஆணை மற்றும் கியாஸ் அடுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் நிர்மலா கிரேஸ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மோகன், வத்தலக்குண்டு பேரூராட்சி முன்னாள் தலைவர் சுசித்ராபாண்டியன், கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்