ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை பாம்புகள் கரை ஒதுங்கின

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை பாம்புகள் கடலூர் அருகே கரை ஒதுங்கின.

Update: 2018-04-21 22:30 GMT
கடலூர், 

தென்தமிழகத்தின் கடற்கரையையொட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றங்களால், பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த இயற்கை மாற்றங்களால் நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக நேற்று காலையில் கடல் சீற்றம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

மேலும் சில ஆச்சரிய நிகழ்வாக, தாழங்குடா கடற்கரையில், ஆழ்கடலில் உள்ள பவளப்பாறையில் வசிக்கும் கடல் பாம்புகள் உயிருடன் கரையில் ஊர்ந்து சென்றன. இதனை கடற்கரையோரமாக நடந்து சென்ற மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, தங்கள் செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இத்தகவல் மீனவர் கிராம மக்களுக்கு தெரிந்தவுடன் ஏராளமான மீனவர்கள் கடற்கரைக்கு வந்து கடல்பாம்புகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த பாம்புகளை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டாலும், அவை கரைநோக்கியே வந்தன. இதேப்போல் கடலூரையொட்டியுள்ள கடற்கரை பகுதிகளிலும் இந்த அரியவகை கடல்பாம்புகள் காணப்பட்டன.

மேலும் தாழங்குடா பகுதியில் இறந்து அழுகிய நிலையில் ஒரு திமிங்கலமும் கரை ஒதுங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக அரியவகை கடல் பாம்புகள் மற்றும் இறந்த திமிங்கலம் ஆகியவை கரை ஒதுங்கியிருக்கலாம். இந்த அரியவகை பாம்புகளை, நாங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது ஏதோ ஒரு சில நாட்கள் பார்த்தோம். மற்றநாட்களில் இந்த பாம்புகளை பார்க்க முடியாது. இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் பவளப்பாறைகள் அருகில் காணப்படும். இவற்றை கடற்கரையில் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷமாக இருக்கிறது. இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்