குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?

விருத்தாசலம் நகராட்சி பகுதியில் குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று திருவண்ணாமலையில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-04-21 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மினி குடிநீர் தொட்டிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகப்படும் குடிநீர் முறையாக குளோரினேஷன் செய்யப்படுகிறதா? குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து நகர் நல அலுவலர் வினோத்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விருத்தாசலத்திற்கு வந்தனர்.

அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மினி குடிநீர் தொட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தண்ணீரின் தன்மை, அவற்றை சரியாக குளோரினேஷன் செய்கிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், பல்வேறு இடங்களில் இருந்து குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, சேகரிக்கப்பட்ட குடிநீர் தன்மை குறித்து ஆய்வகத்தின் முடிவுகள் மற்றும் எங்களது ஆய்வறிக்கையை நகராட்சிகள் நிர்வாக ஆணையரகத்தில் சமர்ப்பிப்போம். அதன் தன்மைகள் குறித்து உயர்அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றனர்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் பாலு, பொறியாளர் பாண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்