விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
மணல் குவாரியை திறக்க கோரி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் மணிமுக்தாறு, வெள்ளாறு ஆகிய 2 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் தொட்டிக்குப்பம், எருமனூர், ஏனாதிமேடு, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தன.
இந்த மணல் குவாரிகளை சமீபத்தில் அரசு மூடிவிட்டது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து பல முறை மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள், மணல் குவாரியை மீண்டும் திறக்க கோரி தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மணல் குவாரிகளை திறக்க கோரி அரசகுழி மாட்டு வண்டி தொழிலாளர்கள், சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மணல் குவாரியை திறக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை நேரில் சந்தித்து மனு கொடுக்க அலுவலகத்திற்குள் சென்றனர். ஆனால் அங்கு கோட்டாட்சியர் இல்லை. இதையடுத்து, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனை, சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட அவர், வரும் திங்கட்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்தார். இதனை ஏற்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மணல் குவாரி திறக்க உத்தரவு வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் அறிவித்தனர்.