மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் தி.மு.க கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க., கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Update: 2018-04-21 22:30 GMT
விழுப்புரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

விழுப்புரத்தில் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சீனிவாசக்குமார், ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும், காவிரி மீட்பு விழிப்புணர்வு நடைபயணம் சென்று விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை தமிழகத்தில் இருந்து நியமிக்காமல் வேறு மாநிலத்தில் இருந்து நியமனம் செய்த கவர்னரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்