ஆனைமலை-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் - அய்யாக்கண்ணு பேட்டி

ஆனைமலை-நல்லாறு திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், விவசாயிகளை பற்றி மத்திய மாநில அரசுகள் கவலைப்படுவது இல்லை என்றும் தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.;

Update: 2018-04-21 23:15 GMT
தாராபுரம்,

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் விழிப்புணர்வு பயணம் கடந்த மாதம் 1-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்கள். இந்த விழிப்புணர்வு பயணக்குழுவினர் நேற்று திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் வந்தனர். அங்கு விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தாராபுரம் வந்தனர். பின்னர் தாராபுரத்தில் நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்று மத்திய அரசுநினைக்கிறது. விவசாய பூமியான தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல் போன்றவற்றை எடுத்து விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும். வருமானத்தை பற்றி கவலைப்படும் மத்திய அரசும், மாநில அரசும், விவசாயிகளை பற்றி கவலை இல்லை.

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிடுகிறபோது நான் நாட்டின் பிரதமராக ஆகிவிட்டால் நதிகளையெல்லாம் இணைப்பேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மாட்டேன். உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமாட்டேன் என்று உறுதி கூறினார். ஆனால் பிரதமரான பிறகு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மோடி மறந்து விட்டார்.

கொங்கு மண்டலத்தில் ஆனைமலை ஆறு, நல்லாறு அணை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காமராஜர் கொண்டு வந்த ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் கொங்கு மண்டலத்தில் 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று இருக்கும். கொங்கு மண்டலம் முழுவதும் 100 அடி ஆழத்திற்குள் நீர்மட்டம் இருந்து இருக்கும். தற்போதுகூட அமராவதி அணையில் இருந்து கரூர் வரை அமராவதி ஆற்றில் தலா ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு தடுப்பணை வீதம் கட்டியிருந்தால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர் வரை மக்களுக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்து இருக்கும்.

இந்த திட்டத்தை வலியுறுத்தி கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமையில் பெரிய போராட்டத்தை இந்த பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தல் வந்தால் விவசாயிகள் நாட்டின் முதுகெழும்பு என்கிறார்கள். தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகளாக பார்க்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு கொடுக்கப்படுகிறது. விவசாய விலை பொருட்களுக்கு இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து மத்திய அரசு வேளாண் விளை பொருட்களை இறக்குமதி செய்தால் பாதிக்கப்படுவது நாம்தான். இதையெல்லாம் கண்டித்துத்தான் போராடிவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அய்யாக் கண்ணு குமரலிங்கத்தில் பேசியதாவது:-

காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும். விவசாய கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனைமலை-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் சென்னை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

இந்த விழிப்புணர்வு பயணத்தில் மாவட்ட தலைவர் காளிமுத்து, கே.எஸ்.சுப்பிரமணியம், சி.கதிர்வேல், வி.சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்