திருவொற்றியூரில் பொக்லைன் மூலம் கொட்டப்பட்ட மண்ணுக்குள் புதைந்து ஆட்டோ டிரைவர் சாவு

திருவொற்றியூரில் நடைமேடை அமைக்க பொக்லைன் மூலம் மண் கொட்டிய போது, மண்ணுக்குள் புதைந்து ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-04-21 22:45 GMT
திருவொற்றியூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அத்திப்பட்டு வரை 4-வது வழித்தடம் அமைக்கும் பணியில் ரெயில்வேத்துறை ஈடுபட்டு உள்ளது.

நேற்று காலை திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளி குவிக்கும் பணி நடைபெற்றது.

அப்போது அங்கு ஒரு நபர், சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அதை கவனிக்காத பொக்லைன் எந்திரத்தின் டிரைவர், அவர் மீது மண்ணை கொட்டிவிட்டார். மண்ணுடன் இருந்த சிறிய மற்றும் பெரிய அளவிலான கற்கள் அவரது தலையில் விழுந்ததால் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

தொடர்ந்து அவர் மீது பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் மண்ணை கொட்டினார். இதில் அவர் மண்ணுக்குள் புதைந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தி விட்டு மண்ணை அகற்றி அந்த நபரை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனால் பயந்துபோன பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில் அவர், திருவொற்றியூர் நந்திஓடை குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார்(வயது 40) என்பது தெரிந்தது.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பொக்லைன் எந்திரத்தின் டிரைவரை தேடி வருகின்றனர்.

பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும், ஜான் ஆகாஷ், ராபின் என 2 மகன்களும் உள்ளனர். 

மேலும் செய்திகள்