சி.பி.எஸ்.இ. மாணவர்களும் அரசு பள்ளியை நாடி வருவார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சி.பி.எஸ்.இ. மாணவர்களும் அரசு பள்ளியை நாடி வருவார்கள் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-04-21 22:30 GMT
 கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியில் தனியார் கல்லூரிகள் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் புதிய பாடத்திட்ட மாற்றத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் பிளஸ்-2 முடிந்ததும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்ற கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்த வரையில் இன்னும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. ‘நீட்’ தேர்வை பொறுத்த வரையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், ‘நீட்’ தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, ‘நீட்’ தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் 412 மையங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளியை நாடி வருவார்கள். அந்த அளவுக்கு தமிழக பள்ளிக்கூட பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதைவிட, புரிந்து படிக்கின்ற வகையில் கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கின்ற ஆற்றல் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதில் திருப்பூர் சத்தியபாமா எம்.பி., அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்