கார்பைட் கல் மூலம் பழுத்த பழங்களை விற்றால் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வருவதையே தவிர்த்து வருகின்றனர். பெண்கள் மற்றும் முதியவர்கள் கையில் குடையில்லாமல் வெளியில் வருவது இல்லை.
தற்போது கோடை விடுமுறை வேறு விடப்பட்டு உள்ளதால் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வெளியில் சென்று மகிழ்கின்றனர். பகல் நேரங்களில் வெளியில் செல்லும் போது வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பழச்சாறு கடைகளிலும், ஐஸ்கிரீம் கடைகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நுகர்வோர்களுக்கு தரமான பழங்கள் மூலம் சாறு போட்டு கொடுக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். காலாவதியான பொருட்களை பயன்படுத்த கூடாது என்று பல்வேறு அறிவுரைகளை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தற்போது வெயிலின் தாக்கத்தினால் அவதிப்படும் பொதுமக்கள் வெயில் சூட்டை உடலில் இருந்து குறைத்து கொள்ள பழங்களை சாப்பிடுகின்றனர். தற்போது மாம்பழம், சப்போட்டா போன்ற பழங்கள் எத்தியோப்பியன் என்ற ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகின்றன. மேலும் சில இடங்களில் கார்பைட் கல்லும் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இது குறித்து தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு எத்தியோப்பியன் மற்றும் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களால் நுகர்வோர்களுக்கு வயிற்று பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வியாபாரிகள் எத்தியோப்பியன் மற்றும் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சோதனையின் போது இது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதற்கு சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றனர்.