நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் விசாரணை, பொதுமக்கள் யாரும் மனு அளிக்க வரவில்லை

நிர்மலாதேவி பிரச்சினை குறித்து காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ், அதிகாரி சந்தானத்திடம் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த 14 பேர் மனு கொடுத்தனர். ஆனால் பொதுமக்கள் யாரும் மனு கொடுக்க வரவில்லை.

Update: 2018-04-21 23:00 GMT
மதுரை,

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவி களுக்கு பாலியல் வலைவிரித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், தமிழக கவர்னரால் நியமிக்கப்பட்டார்.

கடந்த 19-ந்தேதி அவர் மதுரையில் விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணைக்கு உதவுவதற்காக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பேராசிரியை கமலி, மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக நேற்று காலை 10 மணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சந்தானம் வந்திருந்தார். பகல் 1.30 மணி வரை அவர் அங்கு இருந்தார். ஆனால் இதுதொடர்பாக அவரிடம் யாரும் மனு கொடுக்க வரவில்லை.

பின்பு காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்களிடம் மனுக்களை பெறுவதற்காக பிற்பகல் 3 மணியளவில் சந்தானம் அங்கு சென்றார். 4 மணி வரை பல்கலைக்கழக பணியாளர்கள் யாரும் வரவில்லை.

பின்னர் இளைஞர் நலத்துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர் பாரிபரமேஸ்வரன், அவரை தொடர்ந்து மேலும் பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் வந்து மனுக்களை கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் கூறுகையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் சில விஷமிகள் பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்தானம் கமிட்டியினரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றனர்.

அடுத்து, காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், தொலைதூர கல்வி உதவி பதிவாளர் மலைச்சாமி, துணைப்பதிவாளர் நாகசுந்தரம் ஆகியோர் வந்தனர். அவர்களும் சந்தானத்தை சந்தித்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவி கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்வு வினாத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்துள்ளார். அவர் எத்தனை விடைத்தாள்களை திருத்தினார், அவர் யாருடைய தலைமையின்கீழ் பணியாற்றினார் என்பது போன்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சந்தானம் கமிட்டி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாங்கள் உரிய ஆவணங்களை கமிட்டியிடம் தாக்கல் செய்தோம். இதுபற்றி வருகிற புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாலை 6 மணியளவில் மனுக்களை பெறும் பணியை முடித்துக்கொண்ட விசாரணை அதிகாரி சந்தானம் பேட்டியளித்த போது கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சினை குறித்து இன்றைய தினம் மொத்தம் 14 பேர் மனு கொடுத்துள்ளனர். அதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் 12 பேர் ஆவர். அருப்புக்கோட்டை கல்லூரியை சேர்ந்த 2 பேரும் தங்களது கல்லூரி பிரச்சினைகளை எடுத்துக்கூறி மனு கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இதுதொடர்பாக எங்களை சந்திக்க கேட்டபோது நேரமின்மையால் வருகிற புதன்கிழமை சந்திப்பதாக கூறியுள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புபவர்கள் நேரடியாக மனு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வேறு யார் மூலமாகவும் எங்களுக்கு வந்தடையச் செய்யலாம். தவறு செய்தவர்கள் பற்றி தெரிவிக்க ஏன் பயப்பட வேண்டும்?

வருகிற புதன்கிழமை அன்றும் பல்கலைக்கழக பணியாளர்களிடம் மனு பெறுவோம். அன்றைய தினமோ அல்லது மறுநாளோ நிர்மலாதேவியிடம் நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்