தேனி நகரில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது

தேனி நகரில் நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது.;

Update: 2018-04-20 23:30 GMT
தேனி,

தேனி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. சில நாட்கள் மாலை நேரத்தில் மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 9 மணியளவில் வெயில் கடுமையாக அடித்தது.

நண்பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகத்துக்கு எரிச்சல் கொடுக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்தது. சாலையோர வியாபாரிகள் வெயிலில் வாடி வதங்கினர். நேற்று தேனி நகரில் 100.4 டிகிரி வெயில் அளவு பதிவானது.

ஆங்காங்கே நின்று கொண்டு இருந்த மரங்களும் காற்று வீசாமல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டு இருந்தன. இதனால், மரத்தடி நிழலில் மட்டுமே குளுமையை உணர முடிந்தது. வீடுகளில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக் காற்றே வீசியது.

வெயில் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளதால் தேனி பகுதிகளில் சாலையோரங்களில் இளநீர், பனை நுங்கு, கரும்புச்சாறு, பழச்சாறு, கம்பங்கூழ் விற்பனை செய்வதற்காக புதிது புதிதாக கடைகள் உருவாகி உள்ளன. மக்களும் வெயிலின் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற பானங் களை வாங்கி பருகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது.

மேலும் செய்திகள்