2-ம் கட்டமாக அம்மா ஸ்கூட்டர் வழங்க ஆணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
2-ம் கட்டமாக அம்மா ஸ்கூட்டர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி கரூர் அருகே ஆத்தூர் பூலாம்பாளையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “புகை இல்லாத சூழலை உருவாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். கியாஸ் இணைப்பு இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்டமாக பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வினியோகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக அம்மா ஸ்கூட்டர் வினியோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் இலவச கியாஸ் இணைப்பை தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். 100 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், திருவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பள்ளப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் 100 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்புகளை கலெக்டர் அன்பழகன், தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான விஜயராஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சக இயக்குனர் கங்காதரன், இந்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சக சார்பு செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குளித்தலை பகுதியில் உள்ள எரிவாயு இணைப்பு பெறாதவர்களுக்கு இலவசமாக கியாஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் மல்லிகா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (மும்பை) தலைமை பொது மேலாளர் அண்ணாதுரை பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு வழங்கினார். மேலும் கியாஸ் அடுப்பு உபயோகிக்கும் முறை, பாதுகாப்பு, பயன்கள் குறித்து எடுத்து கூறினார்.
அரவக்குறிச்சி ஒன்றியம் இனுங்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்தம் கேஸ் உரிமையாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். இதில் 100 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் வசந்தம் கேஸ் மேலாளர் மணி நன்றி கூறினார்.