மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
மாயனூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மாயனூர் வட்டார பகுதியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். மாயனூர் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மணல் அள்ள கோர்ட்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மணல் அள்ள கூடாது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த 10 மாதமாக எங்களது வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படைந் துள்ளது.
தற்போது மாயனூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இருந்தும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்களும், மாடுகளும் பட்டினி சாவு அடையும் நிலை வந்துவிடும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தையும், மாடுகளையும், குடும்பங்களையும் காப்பாற்றிட மாயனூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுவை பெற்ற அதிகாரிகள், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.