இந்திய அளவில் சுகாதாரத்துறையில் தமிழகம் முதன்மையானதாக செயல்படுகிறது

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளதாக தாய்ப்பால் வங்கி திறப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-04-20 22:18 GMT
அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப் பால் சேமிப்பு வங்கி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார். மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் திருமால்பாபு, துணை முதல்வர் ஆதிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக குடும்ப நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், கலெக்டர் ராமன், சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, தாய்ப்பால் சேமிப்பு வங்கியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செவிலியர் மாணவிகள் விடுதி அருகே பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகள் தீவிர சிகிச்சை நெறிமுறைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட, டீன் சாந்திமலர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது-

சுகாதாரத்துறையில் அகில இந்திய அளவில் தமிழகம் முதன்மையானதாக செயல்படுகிறது. சுகாதாரத்துறையில் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதிலும் இதுவரை 9 இடங்களில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான இந்த தாய்ப்பால் சேமிப்பு வங்கி திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், பெருமைக்குரியதாகவும் உள்ளது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினையை போக்க, துத்திப்பட்டு கிராமம் வரை செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அரசு மருத்துவமனை வரை நீட்டிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தற்போது 25 இடங்களில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் இருதய துறைக்கு ‘கேத்லேப்’ அமைக்கவும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்துவருகிறது. இந்த ‘கேத்லேப்’ பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கூறுகையில், “அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழாவுக்கு நேற்று (நேற்று முன்தினம்) மாலை 5 மணிக்குத்தான் எனக்கு தகவல் கொடுத்தார்கள். கால தாமதமாக தகவல் கொடுத்தது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலமாக பென்னாத்தூரில் கொண்டு சென்று விடப்படுகிறது. கழிவுநீர் ஏரியில் கலப்பதால் அங்குள்ள குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தொட்டி கட்டவேண்டும்” என்றார்.

விழாவில் வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் சுரேஷ், வேலூர் தாசில்தார் பாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமு, கணியம்பாடி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராகவன், பென்னாத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருள்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்