தாடிக்கொம்பு பகுதியில் 4 வழிச்சாலை அமைத்தபோது துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள்

தாடிக்கொம்பு பகுதியில் 4 வழிச்சாலை அமைத்த போது துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் சீரமைக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Update: 2018-04-20 21:41 GMT
தாடிக்கொம்பு, 

தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங் களில் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்துவதற்காகவும், நூற்பாலைகளுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தவும் தொலைபேசி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த தொலைபேசி நிலையத்தில் இருந்து தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சிகள் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது, பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. மேலும் கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டிய போதும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் ஒரு சில பகுதிகளில் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருந்தது.

சாலை அமைக்கும் பணியின் போது துண்டிக்கப்பட்ட இணைப்புகள் சீரமைக்கப்படும் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை. மேலும் துண்டிக்கப்படாமல் இருந்த சில இணைப்புகளும் செயல்படாமல் போனது. ஆயிரம் இணைப்புகளுக்கு மேல் செயல்பட்ட தொலைபேசி நிலையத்தில் தற்போது ஓரிரு இணைப்புகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு முன்னேற்றங்களை பெற்று வரும் இந்தியாவில், மாவட்ட தலைநகருக்கு மிக அருகிலும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமாகிய சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ள தாடிக்கொம்புவில் தொலைபேசி இணைப்புகள் சீரமைக்கப்படாமல் உள்ளது வருந்தத்தக்கதாகும். எனவே துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் சீரமைக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்