பழனி கோவிலுக்கு சிலை செய்ததில் மோசடி: கைதான ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலர் ஜாமீன் மனு தள்ளுபடி

கைதான ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2018-04-20 23:15 GMT
தஞ்சாவூர்,

பழனி கோவிலுக்கு சிலை செய்ததில் மோசடி நடந்ததாக கைதான ஸ்தபதி-முன்னாள் செயல் அலுவலர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிய ஐம்பொன் சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலை சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் ஸ்தபதி முத்தையா மேற்பார்வையில் செய்யப்பட்டது.

இந்த சிலையில் தங்கத்துக்கு பதிலாக வேறு உலோகத்தை சேர்த்து ரூ.1 கோடியே 31 லட்சம் மோசடி நடைபெற்றதால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்தபதி முத்தையாவையும், குற்றம் நடந்தபோது பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜாவையும் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஸ்தபதி முத்தையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைதான இருவரும் ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீலும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீலும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று மாலை ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகிய 2 பேருடைய ஜாமீன் மனுவையும் நீதிபதி நக்கீரன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்