மருத்துவ மாணவர்களை அனுமதிக்க கல்லூரி நிர்வாகங்கள் மறுப்பு: ‘சென்டாக்’ கடும் எச்சரிக்கை

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களை அனுமதிக்காத கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்டாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2018-04-20 23:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பட்டமேற்படிப்பு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு சென்டாக் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் 20-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட்டு கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் விருப்பப்படுபவர்கள் சென்டாக் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடைசி நாளான நேற்று மாலை வரை 25 பேர் மட்டுமே சென்டாக்கில் கல்விக்கட்டணத்தை செலுத்தி இருந்தார்கள். இதுதொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் சென்டாக்கில் செலுத்திய கட்டணம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் சென்டாக் மூலம் இடங்களை பெற்ற மாணவர்களை சேர்க்க மறுப்பதாக புகார்கள் வந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கலந்தாய்வு நடத்திய அமைப்பிடம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டால் அவர்களை சேர்க்க வேண்டும். எனவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மறுபடியும் கலந்தாய்வு நடத்தமாட்டோம்.

கட்டணம் செலுத்திய மாணவர்களை சேர்க்க மறுக்கும் கல்லூரிகள் மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் ருத்ரகவுடு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்