மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்துக்கு எதிர்ப்பு: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தர்ணா-வெளிநடப்பு

கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி மூங்கில்துறைப்பட்டில் நடந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டடு, வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-20 22:15 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-ல் ஆலை பேரவை கூட்டம் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் (பொறுப்பு) கவுதமன் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் அனுசுயா தேவி முன்னிலை வகித்தார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் முனியசாமி வரவேற்றார். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன் ஆகியோர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், நிலுவை தொகையை வழங்கி விட்டு ஆலை பேரவை கூட்டத்தை நடத்துங்கள் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கூட்டம் நடந்த மேடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்காத எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டு அங்கிருந்து சென்றனர். எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு காலதாமதமாக ஆலை பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் மேலாண்மை இயக்குனர் அனுசுயா தேவி ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாகக்குழு இயக்குனர் சின்னப்பா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினர். முன்னதாக அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நிர்வாக இயக்குனர்கள் மணி என்கிற ஜெயசந்திரன், சேதுராமன், அன்பரசு, துரைசாமி, பூமாலை, முத்தையன், தேவிகாஜெயச்சந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமை ரசாயனர் இளங்கோவன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்