சத்தியமங்கலம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்தன

சத்தியமங்கலம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. மேலும் குடோன் அடியோடு இடிந்து விழுந்தது.

Update: 2018-04-20 21:30 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் 2.15 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து பலத்த சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. இந்த சூறாவளிக்காற்றால் சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும் சாய்ந்து நாசம் ஆனது.

மேலும் இந்த சூறாவளிக்காற்றால் சத்தியமங்கலம்- பண்ணாரி ரோட்டில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள 70 ஆண்டுகள் பழமையான புளியமரம் முறிந்து விழுந்தது.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதன்காரணமாக சத்தியமங்கலம்- பண்ணாரி ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம்- கெஞ்சனூர் ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்று விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் சத்தியமங்கலம்- கெஞ்சனூர் ரோட்டில் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பெரியகுளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வெங்காய குடோன் அடியோடு இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் நகைகளை அடகு வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வாழையை பயிரிட்டு வளர்த்து வந்தோம். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதையும் தாண்டி வாழை மரங்கள் வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து நாசம் ஆகிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து கணக்கு எடுத்து சாய்ந்த வாழை மரங்களுக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்