இளம்வயது திருமணம்-பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டும் கலெக்டர் சாந்தா பேச்சு

இளம்வயது திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலை நடப்பதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

Update: 2018-04-20 22:00 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

எடை குறைவான குழந்தைகளுக்கு மாற்று உணவு வகைகள், இணை உணவுடன் தானியங்கள், பயறு வகைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கென தனியாக உணவு அட்டை பராமரிக்க வேண்டும். மேலும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் எடை சுமார் 10 கிலோ வரை கூட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். சரியான எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு, தாய் நல்ல ஊட்டச்சத்து நிலையில் இருக்க வேண்டும். இளம் வயது திருமணம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண் சிசுக்கொலை நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

மேலும் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து கர்ப்பிணிகளை விடுபடாமல் பதிவு செய்ய முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு தகவல் தொடர்பு கல்வி அளித்து அவர்கள் மனநிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த தகவல் தொடர்பு கல்வியை பள்ளிக் குழந்தைகள் அளவில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இது குறித்து சுவர் விளம்பரங்களை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் கட்டிட வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மையங்களிலும் மின்சார வசதியுடன், குழந்தைகளின் நலன் கருதி மின் விசிறி வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்