மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு

மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-20 22:30 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் முனீஸ்வரன் (வயது 40) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு வழக்கம்போல் முனீஸ்வரன், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முனீஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முனீஸ்வரன், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில் கடையில் புகுந்து 4 நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பின்னர் முனீஸ்வரன், கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை கவனித்தார். அப்போது கடையின் எதிர்புறத்தில் நின்று கடையை நோட்டமிட்ட ஒரு வாலிபரை முனீஸ்வரன் பார்த்தார். அந்த வாலிபர், தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களில் ஒருவர் என்பது முனீஸ்வரனுக்கு தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் முனீஸ்வரன், அந்த வாலிபரை பிடித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சம்பவம் குறித்து அந்த வாலிபரிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர், குத்தாலம் அருகே கீழையூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் வெற்றிவேல் (23) என்பதும், இவர் தனது நண்பர்களான புத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (20), கும்பகோணம் அய்யப்பன் நகரை சேர்ந்த ஆசைத்தம்பி (20), 18 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடுவது.

கடைகளில் பூட்டை உடைத்து திருடுவது ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் 4 பேரும் கடந்த 17-ந் தேதி மயிலாடுதுறை 2-ம் நம்பர் புதுத்தெருவில் உள்ள காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், ரவிச்சந்திரன், ஆசைத்தம்பி 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.7 ஆயிரத்து 500 கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்