3 மாதங்களில் அமைக்கப்படும்: திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 மாதங்களில் குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-04-20 20:45 GMT
தென்காசி, 

திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 மாதங்களில் குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பேச்சுவார்த்தை

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த திரைப்பட துறை பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், கியூப் போன்ற சேவை நிறுவன அமைப்புகள் ஆகிய முத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு இன்று (அதாவது நேற்று) முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. புதிய படப்பிடிப்புகளும் தொடங்கி விடும். வேலை இழந்து இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணி கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு இந்த அரசு பல்வேறு முயற்சி எடுத்துள்ளது. டிக்கெட் கட்டணம் ஒரே சீராக இருக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் கணிணி மூலம் வழங்கப்படும். இதனால் வெளிப்படை தன்மை ஏற்படும். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மாத காலங்களில் இந்த குழு அமைக்கப்பட்டு கோரிக்கைகளை பரிசீலனை செய்து தீர்வு காணப்படும்.

நிர்மலா தேவி 

பேராசிரியை நிர்மலா தேவி பிரச்சினையில் உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு, அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சென்னை தாய்கோ வங்கி துணை தலைவர் குற்றாலம் என்.சேகர் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்