ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்; 50 பேர் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, ஆலையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, ஆலையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக ஸ்டெர்லைட் ஆலை முன்பு சென்று முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலையில் இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா அருகே திரண்டனர். அங்கு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் ரெஜிஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் ராஜா, புவிராஜ், சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டக்குழு ராஜா, கண்ணன், பாலமுருகன், உமாசங்கர், கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
50 பேர் கைது
அதன்பிறகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.