தேனி புதிய பஸ் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் கலெக்டர் உத்தரவு

பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் தேனி புதிய பஸ் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் கலெக்டர் உத்தரவிட்டார்.;

Update: 2018-04-19 23:13 GMT
தேனி,

தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரில் புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதோடு, பயணிகளும் பல்வேறு பரிதவிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பஸ் நிலையத்துக்கும் அருகில் உள்ள பூங்காவுக்கும் இடையில் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இவை பயணிகள் வந்து செல்வதற்கு இடையூறாக இருந்தன. இனி மேல் இங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கக்கூடாது என்று நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும், நுழைவு வாயில் பகுதியில் தேனிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை நிறுத்தி ஆட்களை இறக்கி, ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர், புறநகர் பஸ்கள் நிற்கும் இடம், டவுன் பஸ்கள் நிற்கும் இடம், நுழைவுப் பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டார். அப்போது பஸ் நிலையத்துக்கு இருவழிகளில் பஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், ஏற்படும் நெரிசலால் பயணிகள் சிரத்துக்கு உள்ளாகின்றனர். இதை போக்க சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது:-

பஸ் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனைத்து பஸ்களும் வர வேண்டும். சிக்னல் பகுதியில் உள்ள வழியாக பஸ்கள் உள்ளே வரக்கூடாது. வெளியேறுவதற்கு மட்டுமே அந்த வழியை பயன்படுத்த வேண்டும். பிரதான நுழைவு வாயிலில் இருந்து டவுன் பஸ்கள், திருப்பூர் பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு நேரடியாக பஸ்கள் வருவதற்கான பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். அதற்காக அந்த பகுதியில் கழிப்பிடம் ஒட்டி தனியாக பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கழிப்பிடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது அவற்றை விரைவில் அகற்ற வேண்டும். ஆட்டோ நிறுத்தத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி அவற்றின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், தேனி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கும் பணிகளை ஆய்வு செய்ததோடு, நகராட்சி அலுவலகத்திலும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்