கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி

கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

Update: 2018-04-19 22:55 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க வசதியாக 6-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு கிடைக்கிறது.

கர்நாடகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த சம்பள உயர்வு முடிவுக்கு அனுமதி வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்படுவது சந்தேகம் என்று தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த மாநில அரசு, அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியை தான் கேட்டுள்ளோம் என்று கூறியது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் இந்த பலனை பெறுகிறார்கள். இந்த சம்பள உயர்வு காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். 

மேலும் செய்திகள்