மதுவிற்றவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மதுவிற்றவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-04-19 22:45 GMT
க.பரமத்தி,

பவுத்திரம் ஊராட்சி கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவர் அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களுக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கண்ணனை கண்டித்து நேற்று காலை கரூர்- தாராபுரம் சாலையில் மரத்துண்டுகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர், வருவாய் ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அதிகாரிகள் கூறுகையில், மது விற்பனை செய்த கண்ணன் கைது செய்யப்படுவார் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- தாராபுரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மதுவிற்பனை செய்து வந்த கண்ணன் மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்