எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு-ஆர்ப்பாட்டம் தி.மு.க.வினர் 50 பேர் கைது

கரூர் மாவட்ட பகுதிகளில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-19 23:00 GMT
கரூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கவிஞர் கனிமொழி எம்.பி. குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக் குரிய கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து கரூர் பஸ் நிலையம் அருகே கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில், எச்.ராஜா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். தொடர்ந்து எச்.ராஜாவிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

50 பேர் கைது

இதேபோல் லாலாப்பேட்டையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். முன்னதாக லாலாப்பேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து ஊர்வலமாக வந்து காந்தி சிலை அருகே எச்.ராஜா உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதில் ஈடுபட்ட 3 பெண் உள்பட 50 பேரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து அவர்களை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே கரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கந்தசாமி, புன்செய்புகழுர் பேரூர் செயலாளர் சாமி நாதன் ஆகியோர் தலைமையில் புன்செய்புகழுர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தயாராக வைத்திருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் எரிந்து கொண்டிருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

குளித்தலை

குளித்தலை காந்திசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய தி.மு.க.வினர், அவரது உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர். 

மேலும் செய்திகள்