மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து வெட்டிக்கொலை போலீசார் வலைவீச்சு

அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-04-19 22:45 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் உள்ள ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(வயது 45). விவசாயியான இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மனோகரன் அய்யம்பேட்டை கடைத்தெருவிற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

மாத்தூர் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அவர் சென்றுகொண்டு இருந்தபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல், மனோகரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் வழிமறித்தவுடன் மனோகரன் ஒருகணம் செய்வதறியாது திகைத்தார்.

பின்னர் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த அவர் சுதாரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை அப்படியே கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அந்த கும்பல் மனோகரனை சுற்றி வளைத்தது.

பின்னர் தாங்கள் வைத்து இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் மனோகரனுக்கு நெற்றி, இடுப்பு, கழுத்து உள்பட உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

மர்ம கும்பல் வெட்டியதில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மனோகரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனோகரன் கொலைக்கான காரணம் என்ன? குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்