கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறிய அரசு பெண் டாக்டர் கைது

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறிய அரசு பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.;

Update: 2018-04-19 23:00 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் டாக்டர் வரதராஜலு தெருவை சேர்ந்தவர் டாக்டர் தமயந்தி ராஜ்குமார். இவர் தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஆத்தூரில் ‘மதுரா‘ என்ற பெயரில் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறி வந்துள்ளனர்.

இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த ஸ்கேன் சென்டர் 2 முறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால், ஸ்கேன் சென்டரின் சீல் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் உரிய அனுமதியின்றி ஸ்கேன் பார்ப்பதாகவும், கருவில் உள்ள குழந்தை குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் சென்னை மருத்துவத்துறை இயக்குனருக்கு புகார்கள் சென்றன.

இதைத்தொடர்ந்து மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உத்தரவின்பேரில், இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், கடலூர் மருத்துவமனை கதிரியக்கவியல் டாக்டர் நடராஜன், மருத்துவத்துறை குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், மருத்துவப்பணிகள் துறை சேலம் மாவட்ட இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சத்யா, தாசில்தார் முத்துராஜா, இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது கர்ப்பிணிகள் சிலர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்கேன் பார்க்க வந்ததும் தெரியவந்தது. மேலும் இது குறித்து டாக்டர் தமயந்தி ராஜ்குமாரிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை நேற்று இரவு 9 மணி வரை 7 மணி நேரம் நீடித்தது.

விசாரணையில் அவர் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினத்தை பார்த்து கூறியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்தூர் போலீசார் டாக்டர் தமயந்தி ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவப்பணிகள் துறை சேலம் மாவட்ட இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சத்யா நிருபர்களிடம்கூறியதாவது:-

ஆத்தூரில் செயல்பட்டு வந்த மதுரா மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து தெரிவித்து வந்துள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். இதற்காக டாக்டர் தமயந்தி ராஜ்குமார், ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலித்து வந்துள்ளார். நாங்கள் பரிசோதனைக்காக ஒரு கர்ப்பிணியை அனுப்பி வைத்தோம். அவரிடம் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கேட்க கூறி இருந்தோம். இதன்படி அவரும், டாக்டரிடம் கேட்டுள்ளார். அவர் கருவில் உள்ள குழந்தை குறித்து தெரிவித்து, ரூ.6 ஆயிரம் பெற்றுள்ளார். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அவர் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால், சிலருக்கு கருவையும் கலைத்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்