மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொன்று புதைப்பு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-04-19 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்த கணியாகுளம் அருகில் உள்ள பண்டாரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். சுகுமாரனின் மனைவி பொன்னம்மாள் (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுகுமாரனின் சித்தப்பா மகன் ஜேக்தாமஸ் (33). இவரும் அதே பகுதியில் வசித்து வந்தார்.

வெளிநாட்டில் சுகுமாரன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடைய மனைவிக்கு தேவையான உதவிகளை ஜேக்தாமஸ் செய்து வந்தார். இதனால் நாளடைவில் இருவரும் நெருக்கமாயினர். இந்த நெருக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விஷயத்தை அக்கம், பக்கத்தார் அறிந்ததோடு, வெளிநாட்டில் இருந்த சுகுமாரனுக்கும் தெரிவித்தனர். அவர் அங்கிருந்தவாறே தனது மனைவியையும், ஜேக்தாமசையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்தார்.

இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சுகுமாரன் ஊருக்கு விடுமுறையில் வந்தார். அப்போது பொன்னம்மாளுக்கும், ஜேக்தாமசுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு சம்பந்தமாக சுகுமாரன் இருவரையும் மீண்டும் கண்டித்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு எதிராக இருக்கும் சுகுமாரனை கொலை செய்ய ஜேக்தாமஸ், பொன்னம்மாள் ஆகியோர் திட்டம் தீட்டினர். அந்த திட்டத்தின்படி 8-1-2010 அன்று வீட்டில் இருந்த சுகுமாரனை, ஜேக்தாமஸ், பொன்னம்மாள் ஆகியோரும், உறவினர்கள் பண்டாரத்தோப்பு அழகர்கோணத்தை சேர்ந்த தாஸ் (23), பண்டாரத்தோப்பை சேர்ந்த ராசப்பன் என்ற ராஜய்யன் (38) ஆகிய 4 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

பின்னர் அவருடைய உடலை அருகில் ரோட்டுக்கு மேல்புறம் ஆற்றங்கரையோரத்தில், கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் புதைத்தனர். இதற்கிடையே தன்னுடைய அண்ணனை காணவில்லை எனக்கூறி சுகுமாரனின் தம்பி பாபு வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரனை தேடி வந்தனர். அவருடைய மனைவி பொன்னம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜேக்தாமசுக்கும், பொன்னம்மாளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த கள்ளத்தொடர்பு காரணமாக சுகுமாரன் கொலை செய்யப்பட்டதும், இந்த கொலைக்கு தாஸ், ராசப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. போலீசாருக்கு சுகுமாரன் கொலையில் தான் சம்பந்தப்பட்ட தகவல் தெரிந்துவிட்டதை அறிந்த தாஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் ஜேக்தாமஸ், பொன்னம்மாள், ராசப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில் பொன்னம்மாள் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஜேக்தாமஸ், ராசப்பன் ஆகியோர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கை மாவட்ட செசன்சு நீதிபதி எஸ்.கருப்பையா விசாரித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி ஜேக்தாமஸ், ராசப்பன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை விவரம் 19-ந் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

இதையடுத்து ஜேக்தாமஸ், ராசப்பன் ஆகிய 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி எஸ்.கருப்பையா, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஜேக்தாமஸ், ராசப்பன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகள்