சங்கிலி பறிப்பு கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவன் போலீஸ் கமிஷனர் பாராட்டு
சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் டி-பிளாக் 3-வது தெருவில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த 17-ந் தேதியன்று இரவு மர்ம வாலிபர் ஒருவர் டாக்டர் அமுதாவிடம் சிகிச்சை பெறுவதுபோல கிளினிக்கிற்கு வந்தார். திடீரென்று அமுதா கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த மர்ம வாலிபர் தப்பி ஓடினார்.
டாக்டர் அமுதா சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் சூர்யா தங்க சங்கிலியுடன் தப்பிச் சென்ற மர்ம வாலிபரை விரட்டிச் சென்றான். மர்ம வாலிபரை கீழே தள்ளிவிட்டு மடக்கிப் பிடித்தான். பின்னர் அந்த மர்ம வாலிபர் அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுவன் சூர்யா சங்கிலியை பறித்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த சம்பவத்தை கேள்விப்பட்டு நேற்று அவனை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
சிறுவன் சூர்யாவின் துணிச்சலை பாராட்டி சான்றிதழும் வழங்கினார். சூர்யா சென்னை திருமங்கலத்தில் வசிக்கிறான். அவனது தந்தை நாராயணன் டெய்லர் கடை வைத்துள்ளார். அவனது தாயார் பெயர் எல்லம்மாள். ஏ.சி. மெக்கானிக் கடையில் சூர்யா வேலை செய்கிறான்.
அவனது துணிச்சலான செயலை கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரும் பாராட்டினார்கள். சிறுவன் சூர்யாவைப்போல் பொதுமக்கள் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
பிடிபட்ட கொள்ளையன் பெயர் ஜானகிராமன் (26) என்பதாகும். திருவள்ளூர் மாவட்டம் கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்தவர். கொள்ளையன் ஜானகிராமனை விரட்டிச் சென்று பிடித்தது எப்படி? என்பதை போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சிறுவன் சூர்யா நடித்துக் காட்டினான்.