கண்ணபுரம் மாட்டுச்சந்தை களை கட்ட தொடங்கியது
வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் மாட்டுச்சந்தைக்கு 6 ஆயிரம் மாடுகள் வந்துள்ளன. இதனால் சந்தை களை கட்ட தொடங்கி உள்ளது. 5-வயது உடைய பூச்சிக்காளை ரூ.2½ லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில்,
வேளாண் நாடான இந்தியாவில் விவசாயிகள்தான் முதுகெலும்பு. அந்த விவசாயிகளின் அடிநாதமாக விளங்குவது காளைகள். விவசாயிகளின் வாழ்வில் இரண்டற கலந்ததுதான் மாடுகள். அதில் காங்கேயம் இன காளைகளின் பங்கு மகத்தானது. உழைப்பின் மகத்துவத்தை பறைசாற்றும் காங்கேயம் இன காளைகளை விவசாயிகள் தங்களது வீட்டின் ஒரு அங்கத்தினராக வளர்த்து வருகிறார்கள். காங்கேயம் இன காளைகளின் அழகு, கம்பீரம், தோற்றப்பொலிவு, நிறம், நேர்கொண்ட பார்வை, நடை பார்ப்போரை சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. விவசாயிகளின் வீடுகளில் காங்கேயம் இன மாடுகள் நிற்பதே ஒரு பெருமையாக கருதப்படுகிறது.
உலக அளவில் தனி அடையாளம் கொண்டு முத்திரை பதித்து வருபவை இந்த காங்கேயம் இன காளைகள். காங்கேயம் இனகாளைகள், பசுமாடுகள் கடும் வறட்சியை தாங்கும் வல்லமை கொண்டவை. புற்கள் அனைத்தும் காய்ந்துபோனாலும், காய்ந்த பனை ஓலைகள், தென்னை ஓலைகளை உணவாக உட்கொண்டு வாழக்கூடியது. இந்த காளைகள் அபாரமான சக்தி கொண்டது. பல மணிநேரம் தொடர்ந்து சோர்வு இல்லாமல் பாரத்தை இழுத்து செல்லும். மேலும் காங்கேயம் இன மாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. மேலும் எளிதில் நோய்வாய்படாது.
காங்கேயம் இன மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் என்றே திருப்பூர் மாவட்டம் கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடுகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கண்ணபுரத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான விக்ரமசோழீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் காங்கேயம் இனமாட்டுச் சந்தை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கண்ணபுரம் மாட்டுச்சந்தை ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெறும் என்று வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த சந்தைக்கு நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க காங்கேயம் இனத்தை சேர்ந்த அனைத்து ரக மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பதால் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் கண்ணபுரம் மாட்டுச்சந்தை தொடங்கியது. இந்த சந்தைக்கு திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 6 ஆயிரம் காங்கேயம் இனமாடுகளை விற்பனைக்கான கொண்டு வந்து இருந்தனர். இதில் காளைகள், பசுக்கள், ஜல்லிக்கட்டுக்கு உகந்த பூச்சிக் காளைகள், எருதுகள், காளைக்கன்றுகள், கிடாரி கன்றுகளும் அடக்கமாகும்.
விற்பனை
ஆங்காங்கே மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளும், அவற்றை வாங்க வந்து இருக்கும் வியாபாரிகளாலும் கண்ணபுரம் மாட்டுச்சந்தை களைகட்ட தொடங்கி விட்டது. சந்தை பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் காங்கேயம் இன மாடுகளாக காணப்படுகிறது. அதனால் மாடு வியாபாரம் ஜரூராக நடைபெற்றது. தற்போது கடுமையான வெயில் கொளுத்துவதால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை ஓலையால் ஆன பந்தல் அமைத்து அதன் கீழ் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் வெயிலில் மாடுகளை கட்டி உள்ளனர். இந்த மாடுகளை வாங்க மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர். இவர்கள் ஒவ்வொரு மாட்டையும் பார்த்து, அதன்தன்மை மற்றும் வயது குறித்து அந்த மாட்டின் உரிமையாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டும், மாடுகளின் பற்களை பிடித்து பார்த்தும் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
அதன்படி ஒரு வயது உடைய கிடாரிக்கன்று ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 2 வயது உடைய முதல்தர கிடாரிக்கன்று ரூ.70 ஆயிரத்திற்கும், 2 வயது 2-ம் தர கிடாரிக்கன்று ரூ.55 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு வயது உடைய காளைக்கன்று ரூ.25 ஆயிரத்திற்கும், 2 வயது காளைக்கன்று ரூ.50 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கறவை மாடுகளில் காராம் பசு என்று அழைக்கப்படும் காரிபசுமாடு ஒன்று ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், செவலை மாடு ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூச்சிக்காளைகள்
குறிப்பாக பூச்சிக்காளைகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 5-வயது உடைய பூச்சிக்காளை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பூச்சிக்காளையை திருப்பூரை சேர்ந்த ஒருவர் வாங்கி உள்ளார். கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயம் அடிக்கடி நடைபெறும் என்பதால் கம்பீரமான, நல்ல சுழி உடைய மயிலை பூச்சிக்காளை ரூ.2 லட்சம் மற்றும் 2½ லட்சம் கொடுத்து வாங்கி சென்றனர்.
இந்த சந்தையில் மாடுகளை விற்பனை செய்ததும், அந்த மாடுகளை ஒருமுறை வணங்கிய பின்பு, அதை வாங்கியவரிடம் விவசாயிகள் கொடுத்தனர். அப்போது அந்த மாட்டின் ஞாபகார்த்தமாக அந்த மாட்டில் வாலில் இருந்து ஒரு சில முடிகளை எடுத்து அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டனர். மாடுகளையோ, காளையோ வாங்கி சென்றவர்கள் அவற்றை அங்குள்ள கோவிலுக்கு அழைத்து சென்று, மாரியம்மனை வணங்கி விட்டு, அதன்பின்னரே ஊருக்கு கொண்டு சென்றனர். இதற்காக லாரிகளை கொண்டு வந்து இருந்தனர். இந்த லாரிகளில் மாடுகளை ஏற்றி கொண்டு சென்றனர். இதனால் சந்தை பகுதியில் லாரி செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கண்ணபுரத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தை காங்கேயம் இன மாடுகளுக்கு என்றே நடைபெறும் சந்தையாகும். காங்கேயம் இன கால்நடைகளை அறிமுகப்படுத்தி அதை காத்த பெருமை பழையகோட்டை பட்டக்காரர் குடும்பத்தையே சாரும். இவர்களும் கடந்த சில ஆண்டுகளாக கண்ணபுரம் மாட்டு சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சந்தைக்கு லட்சக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது அதிகபட்சமாக 25 ஆயிரம் மாடுகளை வரை கொண்டு வரப்படுகிறது. கொங்குநாட்டின் பெருமையாக, அடையாளமாக கருதப்படும் காங்கேயம் இன மாடுகள் இன்று அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
சுமார் 40 ஆண்டு முன்புவரை கிணறுகளில் இருந்து தண்ணீரை இறைக்க, நிலத்தில் உழவு உழ, வண்டி இழுக்க, காங்கேயம் இனகாளைகளின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது அவை அனைத்திற்கும் எந்திரங்கள் வந்து விட்டதால், கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இதனால் கால்நடைகள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு விட்டன. மேலும் காங்கேயம் இன பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்து என்பதால் காங்கேயம் இன மாடுகள் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் காங்கேயம் இனபசுக்களின் பாலில்தான் சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் தற்போது ஜெர்சி, சிந்து, பிரீசியன், ஹோல்ஸ்டைன் போன்ற இனம் வந்து விட்டது. எனவே காங்கேயம் இன மாடுகளை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். வருவாய் ஒன்றையே பெரிதாக கருதாமல், காங்கேயம் இன மாடுகளை காக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு கண்ணபுரம் மாட்டுச் சந்தையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.